திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி. ஆர். பாலு, நேற்று (09 மார்ச் 2021), மக்களவையில், சுற்றுச் சூழலை பாதிக்கும், பயிர்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமருக்கு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாய இயந்திரங்களை பயன்படுத்த இயலாத நிலையில், பயிர்க் கழிவுகள் எரிப்பினைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும், வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து, உயிரி வாயு மற்றும் எத்தனால் முதலிய பொருட்களைத் தயாரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? எனவும், விரிவான கேள்வியை, மக்களவையில், டி.ஆர்.பாலு, எழுப்பினார்.
இது தொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர், மக்களவையில், அளித்த பதில் பின்வருமாறு :
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் நிலத்தின் அளவு குறைவாக இருப்பதாலும், விவசாய இயந்திரங்களின் விலைகளை கருத்தில் கொண்டும், பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில், பயிர்க் கழிவுகள் எரிப்பினைத் தடுக்க, தேவையான விவசாய இயந்திரங்களை வாடகைக்கு அளிக்கும், சிறப்புத் திட்டத்தினை மத்திய விவசாயத் துறை மேற்கொண்டுள்ளது என்றும்,
விவசாய நிலங்களிலிருந்து வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் வைக்கோல் போன்ற பொருள்களிலிருந்து, உயிரி வாயு தயாரிக்கும் முயற்சிகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், பொதுத் துறையில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக, சுற்றுச் சூழலை பாதிக்காத, உயிரி வாயுக்களை, வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து தயாரிக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று விரிவான பதிலை தெரிவித்துள்ளார்.