மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது பா.ஜ.க அரசு.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை நீட் தேர்வால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆகவும், பொதுப்பிரிவு, ஓ.பி.சி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு கட்டணத்தில் ஜி.எஸ்.டி வரியாக பொதுப்பிரிவு, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கு ஏற்கனவே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.