இந்தியா

“தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையிலேயே ரயில் கட்டண மறைமுக உயர்வு” : SRMU குற்றச்சாட்டு!

தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்தியுள்ளது என கண்ணையா தெரிவித்துள்ளார்.

“தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையிலேயே ரயில் கட்டண மறைமுக உயர்வு” : SRMU குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனியார்மயத்தால் நிர்ணயிக்கப்படவுள்ள அதிக கட்டணத்திற்கு மக்களை பழக்கப்படுத்தும் விதமாக, மறைமுக கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மூர் மார்க்கெட் வளாகம் அருகே உள்ள எஸ்.ஆர்.எம்.யூ அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப் படியை, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை, 329 ரயில்கள் தென்னகத்துக்கு விடப்பட்டிருந்த நிலையில், தற்போது 190 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் அதில் 36 வண்டிகளை பண்டிகை கால ரயில்கள் எனும் பெயரில் அதிக கட்டணத்துக்கு தினந்தோறும் இயக்குவதாகவும் கண்ணையா தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் வேளையில், ரயில் கட்டணங்களையும் மறைமுகமாக உயர்த்துவது மக்களை வஞ்சிக்கும் செயல் என அவர் கண்டித்தார்.

தென் தமிழகத்துக்கான 154 ரயில்களில் இருந்த 169 வகை கட்டணச் சலுகைகளில், தற்போது 17 வகையான கட்டணச் சலுகை மட்டுமே வழங்கப்படும் நிலை உள்ளதாகவும் அதுவும் பண்டிகை கால வண்டி எனும் பெயரிலான ரயில்களில், எந்த கட்டணச் சலுகையும் வழங்காமல் இருப்பதும் பயணிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமை என கண்ணையா குறிப்பிட்டார்.

மேலும், 60 வயதான ஆண்களுக்கு இருந்த 40 சதவீத கட்டணச் சலுகையும் 58 வயதான பெண்களுக்கு இருந்த 50 சதவீத கட்டணச் சலுகையும் அனைத்து ரயில்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பதை அவர் வன்மையாக சாடினார்.

ரயில்வே துறையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகத்துக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை எஸ்.ஆர்.எம்.யூ முன்னெடுக்கும் என்றும் கண்ணையா எச்சரித்தார்.

banner

Related Stories

Related Stories