டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழியில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கையை மோடி அரசு ஏற்காததால் தங்களின் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து முதல் பக்கத்தில் முழுபக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பத்தை அமெரிக்காவில் செயல்படும் சிவில் உரிமைகள் அமைப்பான புலம்பெயர்ந்த பெண்களுக்கான நீதி (Justice for Migrant Women) கொடுத்துள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள 75 மனித உரிமைக் குழுக்கள் சட்ட மற்றும் சமூக அமைப்புகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த முயற்சியை அமெரிக்காவைச் சேர்ந்த மோனிகா ரமீரஸ் என்னும் சமூக ஆர்வலர் தொடங்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு அமெரிக்க விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்.
மேலும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த முதல் பக்க விளம்பரத்தில், “இந்திய விவசாயிகள் - மனித வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களை நீங்கள் பற்றவைத்துள்ளீர்கள். பஞ்சாபின் வயல்கள் முதல் கேரள கிராமங்கள் வரை, புது டெல்லியின் வீதிகள் வரை, உங்கள் குரல்கள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. இப்போது நாங்கள் எங்கள் குரல்களை ஒற்றுமையுடன் எழுப்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில், “நாங்கள் விவசாயிகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் உலகின் குடிமக்கள் அனைவரும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். மோடி அரசு அவசரகதியில் மூன்று சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. போதிய ஆய்வுகள் எதுவும் நடத்தாமலும், விவசாயிகள் சட்ட வல்லுநர்கள் என யாருடனும் ஆலோசனை நடத்தாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுமார் 10 லட்சம் விவசாயிகள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால், இந்திய அரசு அவர்கள் மீது வன்முறையைக் கையாளுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.