பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உயர்த்தப்பட்ட இந்த மோடி வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை 62 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாக குறையும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதன் மூலம் உயர்ந்து வரும் விலைவாசியும் பெருமளவுக்குக் குறையும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 51 காசுகளாகவும், டீசல் விலை 57 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக இருக்கும் போது பேட்ரோல் விலை நூறு ரூபாயை நெறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.19.73 விதிக்கப்பட்ட கலால் வரியை மத்திய அரசு இன்று ரூ.32 98 காசுகளாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.