இந்தியாவில் மூட நம்பிக்கையால் தொடர்ந்து உயிர் பலி கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஆந்திராவில் ஆன்மீகத்தில் கொண்ட அதிக ஈடுபாட்டின் காரணமாக பெற்ற மகள்களையே பூஜை நடத்தி கொடூரமாகக் கொலை செய்தனர் படித்த பெற்றோர்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள், அடுத்த கொடூர சம்பவம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள புலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் - ஷாஹிதா தம்பதிகள். இதில், ஷாஹிதா அருகிலுள்ள மதரஸாவில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், அமீல் என்ற கடைசி ஆண் குழந்தையை ஷாஹிதா பலி கொடுத்துள்ளார். ஷாஹிதா நேற்று அதிகாலை 4 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது மகன் அமீலை அல்லாவுக்குத் தியாகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனே ஷாஹிதாவின் வீட்டிற்கு விரைந்தனர். வீட்டின் வாசலில் இரத்தக்கறையுடன் காவல்துறையினர் வருகைக்காகக் காத்திருந்தார் ஷாஹிதா. பிறகு வீட்டிற்குள் சென்ற போலிஸார், குளியலறையில் அமீல் தொண்டைப்பகுதி வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், கணவர் சுலைமான் மற்றும் இரண்டு குழந்தைகளும் போலிஸார் வரும் வரையில் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தகவும், இவர்களுக்கு இந்த கொலை நடந்தது குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஷாஹிதா 3 மாத கர்ப்பிணி என்றும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் உடலை மீட்ட போலிஸார் அருகில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் ஷாஹிதாவைக் கைது செய்த போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள இந்த சூழலிலும், நன்கு படித்த பெற்றோரே தங்கள் குழந்தைகளை மூட நம்பிக்கையால் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.