பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் இணைய சேவையை அரசே முடக்குவது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு இணைய சேவையை முடக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. போராட்டத்தை ஒடுக்குவதற்கு துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளில் அரசே இறங்குவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தின்போதும், நவம்பர் மாதத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களின்போதும் இணைய சேவை பா.ஜ.க அரசால் முடக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின்போதும் இணைய சேவை முடக்கப்பட்டது. இவ்வாறாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே 400 முறைக்கும் மேல் இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 213 நாட்கள் தொடர்ந்து இணைய சேவை முடக்கப்பட்டதே இதுவரை, உலகின் மிக நீண்ட இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது.
Access Now வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் 12 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு தொடங்கி ஒரு மாதமே நிறைவடைந்திருக்கும் நிலையில், 7 முறை இணையத்தை முடக்கியுள்ளது பா.ஜ.க அரசு. விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக ஹரியானா மற்றும் தலைநகர் டெல்லியில் இணைய சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தின் போதெல்லாம் இணையத்தை முடக்குவது இந்தியாவுக்கே அவமானம் எனக் குறிப்பிட்டு அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு பூனாவாலா எழுதியுள்ள கடிதத்தில், “எப்போதெல்லாம் மக்கள் போராட்டம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் அரசு இணைய சேவையை தன்னிச்சையாக துண்டித்துவிடுகிறது. தற்போது ஆளும் பா.ஜ.க அரசு உலகிலேயே அதிக அளவில் இணைய முடக்கம் செய்த சாதனையை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. இது ஒரு அவமானகரமான சாதனை.
இதுகுறித்த வழக்கை தாங்கள் தானாக முன்வந்து ஏற்று நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன். தற்போதைய அரசும் அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேசவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.