பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த நாள் முதலே நாட்டு மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்கும் அடக்கு முறை பாங்கே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றும் முனைப்பில் பாஜகவும் அதன் தலைமை இயக்கமான ஆர்.எஸ்.எஸும் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது.
அதன்படி, சிறுபான்மையினர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தவர்களை ஒடுக்கும் வகையில் சமூக நீதியை காக்கும் இடஒதுக்கீட்டு திட்டங்களை நீர்த்துப்போகச் செய்கின்றனர். அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்புவோர் மீது தேச துரோகி, தீவிரவாதி, அந்நிய நாட்டவர் என்றெல்லாம் அடுக்கடுக்காக பட்டங்களை தீட்டுகிறார்கள்.
CAA, காஷ்மீர் சிறப்பு சட்டங்கள் ரத்து, புதிய வேளாண் சட்டங்கள் என மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தால் உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதையும், வழக்குப்பதிவு செய்வதையுமே முழுமுதற் வேலையாக வைத்திருக்கிறது மோடியின் பாஜக அரசு.
இதுமட்டுமல்லாமல், ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான, அரசு திட்டங்களுக்கு எதிராக பதிவு செய்தால் அவர்களது கணக்குகளை முடக்குவது, பதிவிடுவோர் மீது தேவையற்ற சட்டங்களை பாய்ச்சுவது என தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாஜக அரசு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என அனைத்தையும் ‘ஒரே நாடு’என்பதன் கீழ் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வருவதால் இதன் மூலம் பன்முகத்தன்மை என்ற இந்தியாவின் தனித்துவம் அடியோடு அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த இந்தியாவை சுதந்திர பாதைக்கு இட்டுச் சென்ற மகாத்மா காந்தி, நேதாஜியின் புகழை பாடியபடியே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போன்று மோடி அரசோ அறிவிக்கப்படாத சர்வாதிகார போக்கை நாட்டு மக்கள் மீது கையாண்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் அதற்கான உதாரணங்களே.
நிலைமை இப்படி இருக்க, மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகார போக்கையே கடைப்பிடிக்கிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. அது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், இதுவரை உலகில் இருந்த சர்வாதிகளின் பெயர்கள் அனைத்தும் 'M'என்ற எழுத்திலேயே தொடங்குவதன் பொருள் என்ன? என கேள்வி எழுப்பி முசோலினி, முஷாரப், மார்கோஸ், மிலோஸ்விக், மோபுட்டோ, மைகாம்பிரோ போன்ற உலக சர்வாதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், பொது வெளியில் போராட்டம் என குரல் எழுந்தாலே அது தேச துரோகம் என பச்சைக் குத்தி எதிர் வரும் காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு கூட வாய் திறவாத நிலையை இந்த மோடி அரசு ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது கசப்பான உண்மையாகவே பார்க்கப்படுகிறது.