டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராடும் விவசாயிகளுக்காக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மற்ற நாட்டை சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ட்ரூடோ தொடங்கி, பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் உட்பட பல பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலர், மோடி அரசுக்கு ஆதரவாக டெல்லியில் போராடும் விவசாயிகளை தீவிரவாதி, இடைத்தரகர்கள் என்றும் ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்களுக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் மோடி அரசாங்கம் தங்களுக்கு ஆதரவு கருத்துகளை தெரிவிப்பதற்கு களம் இறக்கியுள்ளது. அதன்படி, கிரிகெட் கடவுள் என கொண்டாடப்படும், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ளமுடியாது. வெளியாட்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும். இந்தியர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் ஒரு தேசமாக இணைந்திருப்போம்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ள இந்நேரத்தில், நாம் ஒற்றுமையாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டின் ஒரு அங்கம். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூக தீர்வை கண்டுபிடிப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ரஹானே வெளியிட்டுள்ள பதிவில், “நாம் ஒன்றாக இருந்தால் தீர்க்க முடியாத பிரச்னை என்று ஒன்றும் கிடையாது. நாம் ஒன்றிணைந்து நம் நாட்டின் உள் விவகாரங்களை தீர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிவில், “இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம். எந்த நாட்டிலும் விவசாயிகள் தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இது நம் நாட்டின் உள்நாட்டு பிரச்னை. பேசி தீர்ப்பது மூலம் இதற்கு தீர்வு காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ளேவும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உள்நாட்டு விவகாரங்களை சுமுகமாக தீர்ப்பதில் திறன் படைத்தது என்றும் முன்னேறுவோம் மேலேறி செல்வோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கவுதம் கம்பிர் வெளியிட்டுள்ள பதிவில், “வெளியாட்கள் நம்மை பிரித்தாள முயற்சி செய்கின்றனர். இந்தியா இதனை எதிர்கொண்டு மீண்டு வரும்” என தெரிவித்துள்ளார். அதேபோல், சுரேஷ் ரெய்னா பதிவில், “நாம் ஒரே நாடக இருந்து பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்வோம். பிரச்சனைகள் இன்றும் நாளையும் இருக்கும் அதற்காக நாம் பிரிந்திருக்க வேண்டாம். நடுநிலையான உரையாடல் மூலம் சுமூகமான உடன்பாட்டை எட்டலாம்” என தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மோடி அரசுக்கு ஆதரவாக கிரிக்கெட் பிரபலங்கள் குரல் கொடுத்து வருவது வேதனை அளிப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் காட்டமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படாமல் போராடும் விவசாயிகளின் வலியை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலைதள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.