இந்தியாவில் உள்ள 3 பெரும் பணக்காரர்களுக்காகவே இணைய வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கி உள்ளதாகத் தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவரும் பிரதமர் மோடி, தனக்கு நெருக்கமான 3 பெரும் பணக்காரர்களின் நலன்களுக்காகவே இணைய வழியில் ஆட்சி நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் உள்ள தொழில்கள் அனைத்தும் தற்போது 3 அல்லது 4 ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி கூறினார். மேலும், புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் இன்னும் முழுமையாக படித்திருக்கவில்லை. அப்படி முழுமையாக படித்திருந்தால் நாடே பற்றி எரியும் அளவுக்கு சூழல் உருவாகியிருக்கும் என்றார்.
இதற்கிடையே, இந்தியப் பொருளாதாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரத்தை எப்படி சீரழிப்பது என்பதை மோடி அரசிடம் இருந்துதான் பாடம் கற்க வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.