உலகின் முதன்மையான தகவல் பகிர்வு தளமான வாட்ஸ்-அப்பின் தனியுரிமைக் கொள்கைகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்-அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் (Pop-up), பயனர்களின் தொலைபேசி எண், தொடர்பு எண்கள் உள்ளிட்ட சுயவிவரங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் பகிர ஒப்புதல் கேட்டது.
இதனால் பயனர்கள் மத்தியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. வாட்ஸ்-அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பலரும் வாட்ஸ்-அப்பில் இருந்து வெளியேறினர்.
தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்த நிலையில் வாட்ஸ்-அப் நிறுவனம் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டவர்களோடு பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என்றும், வாட்ஸ்-அப் பிஸினஸ் தனியுரிமையில் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்-அப் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன :
தனிப்பட்ட செய்திகளை எங்களால் பார்க்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது. நீங்கள் எதைப் பகிர்ந்தாலும் அது உங்களுக்கிடையில் மட்டுமே இருக்கும். இந்த பாதுகாப்பை நாங்கள் ஒருபோதும் பலவீனப்படுத்த மாட்டோம்.
யார் தகவல் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்க மாட்டோம். இரண்டு பில்லியன் பயனர்களின் தனியுரிமை தகவல்களை வைத்திருப்பது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்.
பயனரால் பகிரப்பட்ட இருப்பிடத்தை எங்களால் பார்க்க முடியாது. End-to-end encryption மூலம் தகவல் பாதுகாக்கப்படுவதால் உங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிரும் நபர்களைத் தவிர வேறு யாரும் பார்க்கமுடியாது.
நாங்கள் உங்கள் தொடர்புகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே, நம்பகத்தன்மைக்காக உங்கள் முகவரி புத்தகத்திலிருந்து தொலைபேசி எண்களை மட்டுமே அணுகுவோம்.
வாட்ஸ்-அப் குழுக்கள் தனித்தன்மை கொண்டவை. விளம்பர நோக்கங்களுக்காக நாங்கள் இந்த தரவை ஃபேஸ்புக்குடன் பகிர மாட்டோம். குழுவின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது.
உங்கள் செய்திகளை மறைந்து போகும்படி நீங்கள் அமைக்கலாம். கூடுதல் தனியுரிமைக்காக, உங்கள் செய்திகளை அனுப்பிய பின் அவை மறையும்படியான அமைப்பை நீங்கள் தேர்வு செய்யலாம். பயனர்கள் தகவல்களை நீக்கவோ, தரவிறக்கம் செய்துகொள்ளவோ முடியும்.
வாட்ஸ்-அப் பிஸினஸ் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடலை நிர்வகிக்கவும், பயனுள்ள தகவல்களை அனுப்பவும் பேஸ்புக்கிலிருந்து பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வை பிஸினஸ் சேவைக்கு வழங்குகிறோம்.
நீங்கள் வணிக நிறுவனங்களோடு தொடர்பு கொள்வதைத் தேர்வுசெய்தால், உங்கள் வணிக செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களைப் பெறுவீர்கள். இது போன்ற அம்சங்கள் நீங்கள் விரும்பினால் மட்டுமே செயல்படக்கூடியவை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.