உத்தர பிரதேசத்தின் முராத் நகர் மயானத்தில் ஜெய் ராம் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கில் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மழை பெய்ததால் அங்கிருந்த அனைவரும் தகன மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கூரையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் தகன மேடையின் கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், பெரும் உயிரிழப்புக்குக் காரணமாக கட்டிடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் அஜய் தியாகி உள்ளிட்ட நான்கு பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அஜய் தியாகி, இடிந்து விழுந்த கட்டடத்தின் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முராத் நகர் நகராட்சி அலுவலர்களுக்கு ரூ. 16 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2020 பிப்ரவரியில் மயான தங்குமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை இணைய ஒப்பந்தப்புள்ளி மூலம் ரூ. 55 லட்சத்துக்கு பெற்ற அஜய் தியாகி அதற்கு சுமார் 30% லஞ்சமாக அளித்திருக்கிறார்.
ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்படவேண்டிய நிலையில், லஞ்சமாகவே ரூ.16 லட்சத்தை கொடுத்துவிட்டதால், தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி கட்டிடத்தை நிறைவு செய்துள்ளதே இத்தகைய உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
உத்தர பிரதேச பா.ஜ.க ஆட்சி நிர்வாகத்தில் லஞ்சம் ஊழல் மலிந்து வருவதாகவும், யோகி ஆதித்யநாத் அரசே இந்த உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிக்ள் குற்றம்சாட்டியுள்ளன.