மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.
மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும்படியும் கூறி மத்திய அரசு எழுதிய கடிதத்தையும் விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
தேசிய உழவர் தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் இன்று தொடர்கிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழு, “சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என்று தான் போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஆனால், அரசு சட்டங்களை திரும்ப பெற முடியாது திருத்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிவருகிறது. பேச்சுவார்த்தைக்கு செல்வதா வேண்டாமா என்பது குறித்து இன்று பிற்பகல் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.
ஹரியானா விவசாயிகள் 26,27,28 தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை முடக்குவதாகக் கூறியுள்ளனர். இதனிடையே டெல்லி வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை உ.பி மாநிலம் மொரடாபாத்தில் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அவர்கள் அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.