விவசாயிகள் போராட்டத்தை நேரில் பார்த்து கவலையடைந்து தற்கொலை செய்துகொண்ட சீக்கிய மத போதகர் பாபா ராம் சிங் உடல் கர்னல் பகுதியில் உள்ள அவருடைய சொந்த கிராமமான சிங்கரா கிராமத்தில் உள்ள குருத்வாராவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இன்றே இறுதிச் சடங்குகள் செய்து உடலை எரியூட்ட வேண்டும் என்று ஹரியானா போலீசார் கூறியுள்ளனர். இதனால், கர்னால் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.
சீக்கிய மத போதகரான பாபா ராம்சிங் நேற்று முந்தினம் போராட்டம் நடைபெறும் சிங்கு, குண்ட்லி பகுதிகளுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கம்பளிகளை வழங்கியுள்ளார். அவர்களின் உணவு தேவைக்காக ஐந்து லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். அதன் பின்னர் நேற்று மாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் தங்கியிருந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், போராட்டம் நடத்தும் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராடும் விவசாயிகளை அரசு மிக மோசமாக நடத்தி வருவதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, கடும் குளிர் மற்றும் விபத்துக்களில் 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீக்கியர்களின் மத குரு ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அரசின் மூர்க்கத்தனம் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டது. பல விவசாயிகள் தத்தம் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். பிடிவாதத்தை விட்டுவிட்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.