மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 16 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.
இதனிடையே, ஜெய்ப்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நாளை விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலிருந்து இந்த நெடுஞ்சாலையை நோக்கி விவசாயிகள் செல்லாமல் இருப்பதற்காக இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
டெல்லியை இணைக்கும் முக்கிய எல்லையான குருகிராம் பகுதியில் உள்ள ராஜீவ் சவுக், இக்ஃபாய் சவுக் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரம் ஹரியனா போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 14ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆர்பாட்டம், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி ஒரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனிடையே பாரதிய கிசான் சங்கம் சார்பில் 3 சட்டங்களை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க, காங்கிரஸ், ஆர்.ஜெ.டி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அக்டோபர் 12 ம் தேதி மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் அந்த வழக்குகள் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் ராணுவத்தை குவிப்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.