இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்னைக்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு இந்தியாவை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
குறிப்பாக, கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் 46% மக்கள் கடன் வாங்கி குடும்பச் செலவுகளை சமாளித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார நிலையைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் பணியாளர் சேமநல நிதி நிறுவனத்தின் பதிவு பட்டியலில் இருந்து சுமார் 30,800 நிறுவனங்கள் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காலத்தில், நிறுவனங்கள் சந்தித்த பொருளாதார தேக்கநிலையால் இத்தகைய நடவடிக்கையில் தொழில் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லட்சக்கணான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அதாவது, கொரோனா ஊரடங்கின் போது, பெரும் சிக்கலை எதிர்கொண்ட நிறுவனங்கள், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பழைய நிலைக்கு விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் பிஎஃப் நடைமுறையில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறி இருப்பது பழைய நிலையில் இருந்து மேலும் மோசமானதையே காட்டுகிறது.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி இபிஎஃப்ஓ நிறுவனத்தில் 5,34,869 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் அக்டோபர் மாதத்தில் 30,800 நிறுவனங்கள் வெளியேறி உள்ளன. தற்போது 5,04,044 நிறுவனங்கள் மட்டுமே பி.எஃப் நடைமுறை பட்டியலில் உள்ளன.
அதுமட்டுமல்லாது, பிஎஃப் கணக்குதாரர்களின் எண்ணிக்கையும் அக்டோபர் மாதத்தில் 18 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 4.76 கோடியாக இருந்த பிஎஃப் கணக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 4.58 கோடியாக குறைந்துள்ளது.
நிறுவனங்கள் பி.எஃப் தொகைக்கு செலவு செய்ய முடியாத காரணத்தால் வெளியேறியிருக்கலாம். ஆனால் இதனால் அந்த நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கே பெரும் இழப்பு என தொழில் துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொருளாதார மந்தநிலை மிக மிக அபாயகரமானதாக ஆகி வருகிறது. சேமநல நிதி பட்டியலில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 30,800 நிறுவனங்கள் வெளியேறியுள்ளன என்றால் அந்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கதி என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.