திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளநிலையில் அரசியல் கட்சியினர் பிரசார கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், பொதுக்கூட்டம் நடத்தி, முதல்வர் மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
ஹலிடா பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திலீப் கோஷ், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 6 மாதங்களுக்குள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மம்தா கட்சியினரின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும்.
திரிணாமுல் காங். கட்சியினரின் ஒழுங்கீன செயல் அதிகரித்தால் வெளியே வரும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாது. மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். மேலும் ஒழுங்கீனம் அதிகரித்தால், கல்லறைக்குத்தான் அனுப்பி வைப்போம்” என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் திலீப் கோஷின் இந்தப் பேச்சு, மேற்கு வங்க அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க அவரை எச்சரித்து வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.