இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது.
அதேப்போல், இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் 2020ம் ஆண்டில் - 10.3 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2020 - 21 நிதியாண்டின் முதல் பாதிக்குள்ளேயே, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கை, இந்தியா தாண்டியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டு (Controller General of Accounts - CGA) அதிகாரியின் வலைத்தள பக்க புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “2020 - 21 நிதியாண்டின் முதல் பாதிக்குள்ளேயே, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கை, இந்தியா தாண்டியுள்ளது. அதாவது, நிதிப்பற்றாக்குறை இலக்கில் 114.8 சதவிகிதத்தை தொட்டுள்ளது.
மேலும், வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ. 9 லட்சத்து13 ஆயிரத்து 993 கோடியாக உயர்ந்துள்ளது. 2020-21 மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கு ரூ. 7 லட்சத்து 96 ஆயிரம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதம் ஆகும்.
ஆனால், தற்போது இலக்கைத் தாண்டி ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் கோடியைத் (114.8 சதவிகிதம் பற்றாக்குறை) தொட்டுள்ளது. இதுவே கடந்த 2019 - 20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பட்ஜெட் இலக்கில் நிதிப்பற்றாக்குறை 92.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது, இந்த காலகட்டத்தில் மத்திய அரசு வசூலித்த மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி மட்டுமே ஆகும். இதுவும் கடந்த 2019 - 20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களைக் காட்டிலும் 34 சதவிகிதம் குறைவாகும்” எனத் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சி.ஜி.ஏ தரவுகளின்படி, கடந்த 6 மாதங்களில் அரசாங்கம் செய்த மொத்த செலவு ரூ. 14 லட்சத்து 79 ஆயிரத்து 410 கோடி. இது 2020-21 பட்ஜெட் இலக்கில் 48.63 சதவிகிதம். ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில், பட்ஜெட் இலக்கில் 53 சதவிகிதம் (ரூ. 14 லட்சத்து 88 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டு உள்ளது.
அதாவது, கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது நிதிப் பற்றாக்குறை அதிகரித்து இருந்தாலும், கடந்தாண்டை விட குறைவாகவே அரசு செலவிட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உடல் நலத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்பது அவசியத்தை மோடி அரசு உணரவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.