உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 19 வயது தலித் பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்தது.
மேலும் அந்த 4 பேரும் சேர்ந்து அந்த 19 வயது இளம்பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து அவருடைய கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டது. அந்த நேரத்தில் குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் உடலைக் கடைசியாக ஒருமுறை தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டபோதும், உ.பி போலிஸார் அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக நள்ளிரவில் தாங்களாகவே தகனம் செய்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
எனவே ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாலியல் கொலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.