தெலங்கானா மாநிலத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலம் துபாகா தொகுதியில் ரகுநந்தன் ராவ் என்பவர் பா.ஜ.கவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், துபாகா தொகுதியில் பா.ஜ.கவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் அதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் போலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது பா.ஜ.க வேட்பாளரின் உறவினர் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் 18.67 லட்சம் கைப்பற்றப்பட்டது. அப்போது சோதனையில் ஈடுபட்ட சித்திப்பேட் காவல்துறையினருடன் பா.ஜ.கவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் போலிஸாருக்கும் பா.ஜ.கவினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு பா.ஜ.கவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர் திடிருச் சென்ற பணம் 12 லட்சம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.