கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த சூழலில், கேரளாவில் சில கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பேதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு அரசின் கவனத்திற்குச் சென்றது.
இதனையடுத்து கேரள அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பற்றக்குறை உள்ள மருத்துவமனைக்களை ஆய்வு செய்தது. அப்போது, பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளது தெரியவந்தது.
குறிப்பாக, கேரள அரசின் பணிக்கு சேர்ந்த மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட ஏராளமானோர் நீண்டகால விடுப்பு எடுத்து வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு சம்பளம் அதிகம் கிடைப்பதால் தொடர்ந்து அங்கேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு பணிக்கு வராமால் நீண்டகால விடுப்பில் சென்றவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்ட, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும் படி சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை.
இதனையடுத்து பணிக்கு திரும்பாத 385 அரசு மருத்துவர்கள் மற்றும் 47 ஊழியர்கள் என 432 சுகாதாரத் துறை ஊழியர்களை அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் ஆயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சிலர் எந்த காரணமும் இன்றி, பணிக்கு வாராமல் விடுப்பு எடுத்துள்ளனர். இது முறையல்ல; அவர்கள் மீண்டும் பணிக்கு சேர பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், அப்படி இருந்தும் பலர் திரும்ப பணிக்கு வராத்தால், அவர்களை பணி நீக்கம் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.