மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசால் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.
இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோமொபையல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.
அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு கூட வட மாநிலங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அதுதொடர்பான புகார்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைப் போக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிட்டு அதற்கான விழிப்புணவு மற்றும் தீர்வை அறிவிப்பதற்காகவும் உலகில் உள்ள 117 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ‘உலக அளவிளான பட்டினி மதிப்பீடு’ என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிடும்.
குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம் கொண்டிருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்து, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றை வைத்தும் இந்த பட்டினி குறீயிடு கணக்கிடப்படும்.
அதன்படி, இந்தாண்டுக்கான சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி அவர்கள் வீணடிக்கப்படுவதாக உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை தெரிவித்துள்ளது. 2015-20 காலக்கட்டத்தில் இது படுமோசமான நிலைக்குசென்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதில், 117 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா தனது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை விடவும் மோசமான இடத்தைப்பெற்றுள்ளது. தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 94-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 88வது இடத்திலும், நேபாளம் 73வது இடத்திலும், வங்காளதேசம் 75வது இடத்திலும் இலங்கை 88வது இடத்திலும் மற்றும் மியான்மர் 78வது இடத்திலும் உள்ளன. மேலும் பொருளாதாரத்தில் மிகவும் மோசமாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், தொடர்ந்து ‘கடுமையான’ பட்டினி நிலவும் நாடுகளின் பிரிவிலேயே இந்தியா தொடர்வதாகவும் ஜி.எச்.ஐ ஆய்வு தெரிவித்துள்ளது. தெற்காசியாவில், ஆப்கானிஸ் தான் நாடு மட்டுமே இந்தியாவைக் காட்டிலும் மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இதேபட்டியலில், இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், அப்போது தரவரிசைப்படுத்தப்பட்ட நாடுகளின் எண் ணிக்கை 117. நான்கு அளவுகோல்களில் இந்தஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு, வேலையின்மைக் காரணமாக, நுகர்வோரிடம் வாங்கும் சக்தி குறையவில்லை; பொருளாதார மந்த நிலை இல்லை என பா.ஜ.க-வினர் தொடர்ந்து கூறிவந்தாலும், உலக நாடுகளில் உள்ள முக்கிய அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சிக் குறைபாடு, பொருளாதார வீழ்ச்சி பற்றி அம்பலப்படுத்தி வருகின்றன.
இதன் மூலம், மோடி ஆட்சியில் மக்கள் மிகுந்த துயரங்களைச் சந்தித்து வருவது தெளிவாவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.