டெல்லியின் முக்கியமான சாலையில் விதிகளை மீறி ஓடிய காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை, காரை நிறுத்தாமல் அந்த வாகன ஓட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (12.10.2020) தெற்கு டெல்லியின் தவுலா குவான் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் ஒன்றில் போக்குவரத்து விதியை மீறியபடி வேகமாக வந்த வாகனத்தை அந்த சாலையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் நிறுத்த முயன்றார். அப்போது அந்த வாகன ஓட்டி காவலரைக் கிட்டத்தட்ட 400 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளார். அந்த காவலரும் விடாமல் காரின் பானெட்டைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் அந்த கார் நெரிசலான பகுதியிலும் அங்கும் இங்கும் வேகமாக ஓடியது. பிறகு சிறிது தூரத்தில் திடீரென பிரேக் அடித்ததும் காவலர் கீழே விழுந்தார். அதன் பிறகும் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. இந்தச் சம்பவம் அனைத்தும் அந்த சாலையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த காவலர் காரை நிறுத்த பட்ட அவஸ்தை பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், போக்குவரத்து காவலர் மஹிபால் சிங்கின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர் மஹிபால் சிங் கூறுகையில், "அக்டோபர் 12 அன்று, மாலை 5:10 மணிக்கு, திலக் நகரை நோக்கிச் செல்லும் தவுலா குவான் சாலையில் நான் நின்றுகொண்டிருந்தபோது, திலக் நகருக்கு வண்டியில் ஒரு வெள்ளை கார் ஜிக்-ஜாக் வழியில் செல்வதைக் கவனித்தேன். காரின் நம்பர் பிளேட்டும் மிகவும் ஆடம்பரமான ஃபேன்ஸி நம்பராக இருந்தது.
நான் காரை நிறுத்த முயன்றேன். ஓட்டுநர் முதலில் காரை மெதுவாக்கினார், பிறகு நான் காருக்கு முன்னால் சென்றபோது, அவர் வேகத்தை அதிகரித்தார். நான் காரின் பானெட்டில் குதித்து, எனது பாதுகாப்பிற்காக வைப்பர்களை பிடித்துக்கொண்டேன் , ஆனால் ஓட்டுநர் காரின் வேகத்தைக் குறைக்கவில்லை, எனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செங்குத்தான ஜிக்-ஜாக் திருப்பங்களை எடுத்தார். நான் காரில் இருந்து விழுந்த சில நொடியில் காரை வேகமெடுத்து, அவர் அந்த இடத்திலிருந்து தப்பித்தார்” என்று புகாரில் குறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தின்போதான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமுகவலைதளத்தில் வேகமாக பரவியதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி காவலர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.