இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் 2020ம் ஆண்டில் - 10.3 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை இன்று வெளியிட்டது.
அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கியுள்ளதாகவும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அண்டை நாடான வங்க தேசத்தை விட 40 சதவீதம் அதிகம் இருந்தது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் ஜி.டி.பி 3.2 சதவீதம் மற்றுமே உயர்ந்துள்ளது.
ஆனால், அதேவேளையில், வங்க தேசத்தின் தனிநபர் ஜி.டி.பி 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மூலம் வங்க தேசம் தனது மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவைவிட பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாகியுள்ளது.
அதேப்போல், உலக பொருளாதார விவரங்களை மேற்கொண்டு நடத்திய ஆய்வில், இந்தாண்டு வங்க தேசத்தின் நனிநபர் பொருளாதார வளர்ச்சி டாலருக்கு 4 சதவீதம் அதிகரித்து $1,888 ஆக உயரும் எனவும், இந்தியாவின் இந்தியத் தனிநபர் பொருளாதார வளர்ச்சி 10.5% குறைந்து $1,887 ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது.
மேலும், தெற்காசிய நாடுகளில் இந்தியாவை விட பாகிஸ்தான், மற்றும் நேபாளத்தில் தனி நபர் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் எனவும் வங்கதேசம், பூட்டான், இலங்கை, மற்றும் மாலதீவுகளில் அதிக நாடுகளில் அதிகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் மோசமான பொருளாதார மேலாண்மை, லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, “பா.ஜ.கவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார். பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.