கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, வெளிநாடுகளில் இருந்தோ வெளிமாநிலத்தில் இருந்தோ செல்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் கைகளில் அடையாள முத்திரை குத்தப்படும்.
பலரும் இந்த அடையாள முத்திரை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் மதுகவுட் யஸ்கிக்கு கொரோனா முத்திரை குத்தியதன் விளைவால், அவரது கையில் தோல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மதுகவுட் யஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லி விமான நிலையம் சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் அவரது கையில் முத்திரை குத்தி உள்ளனர். அந்த முத்திரை குத்தப்பட்டு இரண்டு மூன்று நாட்களில் அவரது தோல் கருப்பு நிறமாக, லேசான வீக்கத்துடன் செப்டிக் ஆகி உள்ளது.
இதனை மதுகவுட் யஸ்கி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காணமுடிகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை குறிப்பிட்டு மதுகவுர் யக்ஷி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், “டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு முத்திரை குத்தப்படுகிறது. அதற்காக அவர்கள் பயன்படுத்தும் ரசாயனம் என்ன என்பது குறித்த விவரங்களை எனக்கு தெரிவிக்க முடியுமா? எனக்கு குத்தப்பட்ட முத்திரையால், என் கை இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ட்விட்டர் பதிவு பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நிலையில், இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் சிஎம்டியுடன் பேசியுள்ளேன் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.