கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடுதிரும்பும்போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகளை பாதியிலேயே வீட்டிற்கு அனுப்பும் கொடூரமும் நடந்துவருகிறது. பேரிடர் காலத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவேண்டும்.
ஆனால் இங்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவில்லை என்பது சமீபமாக வெளியாகும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அதன்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா நோயாளிக்கு சிறப்பு சிகிச்சை என ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாயை அறை வாடகைக்கு மட்டும் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பு சிகிச்சை அளிப்பதாகக் கூறி சாதாரண அறையில் அருகருகே தங்க வைத்துள்ளனர். அப்படி தங்க வைக்கப்பட்டதற்கு அறை வாடகை மட்டும் சுமார் 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்றும், 7 பேருக்கு மேல் சிகிச்சை பெறும் வரும் நிலையில், ஒரே நேரம் மட்டும் மருத்துவர் வருவதாகவும், வார்டுக்கு ஒரே ஒரு செவிலியரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அந்த மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ள நிலையில் தங்களிடமும் அதிகம் கட்டணம் வசூலித்ததாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் சிங்காநல்லூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்க 4 நாட்களுக்கு சுமார் 3 லட்சம் வசூல் செய்ததாகவும், ஆனாலும் தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
அதேபோல், பாலகிருஷ்ணன் எனபவர், தங்களிடம் ஒருநாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துவிட்டு, முறையாக உணவு கூட வழங்கவில்லை என்றும் கூறினார். இதுதொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினால், சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்பே கட்டண விவரங்கள் அடங்கிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்து ஏன் போட்டீர்கள் என மிரட்டும் நோக்கில் பேசியுள்ளனர்.
சாதரண சிகிச்சை பிரிவுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் இந்த தனியார் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அம்மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் செல்ல, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாசியர் சுரேஷ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அந்த தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அதற்கு முறையாக மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தமிழகம் முழுவதும் இதேபோன்று கட்டண கொள்ளையில் ஈடுபட்டுவரும் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.