மூத்த ஆசிரியரான நந்தா பிரஸ்டி, சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், வயதானவர்களுக்கும் தினமும் இரவில் பாடம் கற்பிக்கிறார். இந்த மனிதர் 75 வருடங்களுக்கும் மேலாக ஒரு பைசா கூட வசூலிக்காமல் ஒரு மரத்தடியில் குழந்தைகளுக்குப் பாடங்கள் கற்பித்து வருகிறார்.
இவர் ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பார்தாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த கிராம தலைவர் அவருக்கு நல்ல உள்கட்டமைப்பை உருவாக்க அரசாங்க உதவியைப் பெற்று தருவதாகக் கூறியும் அவர் அந்த சலுகையைத் தொடர்ந்து மறுத்தே வந்துள்ளார். அவர் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து தனது கல்விச் சேவையை தொடர விரும்புவதாகக் கூறியுள்ளார்.
மேலும் மூத்த ஆசிரியரான நந்தா பிரஸ்டி கூறுகையில், “நான் விவசாய நிலங்களில் பணிபுரிந்துள்ளேன், அப்போது நான் எங்கள் கிராமத்தில் கல்வியறிவற்றவர்கள் பலர் இருப்பதை அறிந்துகொண்டேன். அவர்களுக்கு அவர்களுடைய பெயர்களில் கையெழுத்திடக்கூட தெரியாது, நான் அவர்களுக்குக் கையெழுத்திடுவது எப்படி என்று கற்பிப்பதற்காகவே அவர்களை அழைத்தேன், ஆனால் அதில் பலர் ஆர்வம் காட்டி பகவத் கீதையைப் படிக்கும் அளவிற்குத் தொடங்கிவிட்டனர். நான் இப்போது என்னுடைய முதல் பேட்ஜ் மாணவர்களின் பேரக்குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கிறேன்” என்று கூறினார்.
கிராம பஞ்சாயத்துத் தலைவர் கூறுகையில், “அவர் கடந்த 75 ஆண்டுகளாகப் பாடம் நடத்தி வருகிறார். கற்பித்தல் அவரது விருப்பம் என்பதால் அவர் அரசாங்கத்தின் மூலம் வரும் எந்த உதவியையும் மறுக்கிறார். ஆனால் அவர் குழந்தைகளுக்கு வசதியாகக் கற்பிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
அவர் எவ்வளவு குளிர்ந்த வானிலை ஆகட்டும், மழை அல்லது வெப்பக் காற்றையும் பொருட்படுத்தாமல் தன் சேவையை செய்துவந்துள்ளார், இந்த மனிதரின் ஆர்வத்தையும் தன்னம்பிக்கைக்கும் நன்றியாக நாங்களாகவே ஒரு கட்டடம் கட்ட முடிவெடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.