கேரளாவில் 108 ஆம்புலன்ஸில் வைத்து கொரானா நோயாளியான இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அடங்குவதற்குள் கொரோனா கேர் மையத்தில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் கொரானா கேர் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக கேரள எல்லைப் பகுதியான பாறசாலை பகுதியில் தனியார் கல்லூரியில் கொரோனா கேர் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கேரள மாநிலம் செங்கல் பகுதியை சேர்ந்த ஷாலு (25) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அதே கொரோனா மையத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த செல்போனை எடுத்துப் பார்த்தபோது குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து செல்போனை எடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்தார். தொடர்ந்து பாறசாலை போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போனை ஆய்வு செய்தபோது, அது, அந்த கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என தெரியவந்தது.
தொடர்ந்து அவனிடம் போலிஸார் விசாரித்தபோது, தான் சிகிச்சை பெற்று நேற்று கொரோனா நெகடிவ் சான்று கிடைத்ததால் இன்று வீட்டிற்கு செல்லலாம் என்று இருந்ததாகவும், இந்நிலையில் குளியல் காட்சிகளை எடுத்தால் மாட்டமாட்டோம் என்று எண்ணி எடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸில் வைத்து கொரோனா நோயாளியான இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் கொரோனா சிகிச்சை முகாமில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.