வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பிக்களை மாநிலங்களவை துணைத்தலைவர் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில். “மக்களவையில் பாஜக அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து அதிவேகமாக நிறைவேற்றப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா மீது உறுப்பினர்கள் கூறிய எந்த திருத்தத்தையும் வாக்கெடுப்பு நடத்தாமல், தேர்வுக்குழுவுக்கும் அனுப்பாமல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல். மாநிலங்களவையில் நான் இல்லவே இல்லையென ஆளும் தரப்பு முன் வைத்து வருகிறது. ஆனால் தேர்வுக்குழுவுக்கு மசோதாக்களை அனுப்பவேண்டும் என தொடர்ந்து நான் இருந்த இடத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தேன்.
மேலும், வேளாண் மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவைத் தலைவரோ, துணைத்தலைவர் செய்ததில் தவறேதும் இல்லையென்று நியாயப்படுத்தியது பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளோம்.
நாடாளுமன்ற அவைக்கென்று பாரம்பரியமும், சட்டங்களை நிறைவேற்றுவதற்கு என்று மரபும் இருக்கும் போது அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஒருதலைபட்சமாகவே அனைத்தும் நடந்தேறி இருக்கிறது.
எம்.பிக்களின் சஸ்பென்ட் நடவடிக்கை நீடிக்கும் பட்சத்தில் நடப்புக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்.பிக்கள் புறக்கணிப்பதாக முடிவெடுத்திருக்கிறோம். குடியரசுத் தலைவரை சந்தித்து இது தொடர்பாக முறையிட காத்திருக்கிறோம்.
இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நாடாளுமன்றத்துக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை. பொதுத்துறை நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும் விற்றுத் தீர்த்தது போன்று தற்போது விவசாயத்தையும் விற்றுவிட்டார்.
இனி விற்பதற்கு நாட்டில் எதுவும் மிச்சமில்லை. ஏழைகளுக்கு, மக்களுக்கு, விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்காகவே நடந்துக்கொண்டிருக்கிறது.” என குற்றஞ்சாட்டினார்.