தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் தன்னை உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் சந்தித்தது குறித்து புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த், “நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் உளவுத்துறை புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் அத்துமீறி நுழைந்து என்னைச் சந்தித்தனர்.
அவர்கள் மக்களவையில் இன்று நான் என்ன பிரச்னை பற்றி பேசப்போகிறேன் என்று என்னிடம் கேட்டனர். மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்” எனக் குற்றம்சாட்டினார்.
கதிர் ஆனந்த் எழுப்பிய பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர். புகார்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிமைக் குழுவுக்கும் கதிர் ஆனந்த் புகார் அனுப்பியுள்ளார். மேலும், சாணக்கியபுரி காவல் நிலையத்தில் கதிர் ஆனந்த் புகார் அளித்தார்.