பள்ளிப்பருவ பாடத்திட்டங்களில் தென்னிந்தியாவின் வரலாறுகள் புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
“சி.பி.எஸ்.இ 7ம் வகுப்பு பாடத்தை ஆராயும்போது, இந்திய நாட்டின் வரலாறு இரு வேறு விதமாக கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாறு கற்பிக்கப்படுவதில் வட இந்தியாவும் தென்னிந்தியாவும் வேறுபட்டு நிற்கின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் எப்போதும் தேசிய அளவில் பாடத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். கல்விமுறை புதிய அவதாரம் எடுத்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
நம்மிடம் இருந்து தொலைவில் இருக்கும் வரலாற்றை விட, குழந்தையுடன் நெருக்கமாக இருக்கும் வரலாற்றிலிருந்து நாம் தொடங்கலாம். பாடங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். உள்ளூர் வரலாறு, அதனைத் தொடர்ந்து மாநிலம், நாடு மற்றும் சர்வதேச வரலாற்றை கற்பிக்கலாம்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வரலாற்றுப் பாடங்கள் இருக்க முடியுமா? இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாண்டிய வம்சத்தைப் பற்றி, தமிழக குழந்தைகளுக்கே தெரியாத நிலை உள்ளது. சோழர்கள் மற்றும் பிற பிரபலமான பேரரசுகள் வரலாற்றையும் பாடத் திட்டத்தில் சேர்க்கலாம்.
இடைக்காலத்தில் கலாச்சார வரலாறு பற்றிய ஓர் அத்தியாயம், மக்கள் உணவு முறை, உடை அணிந்த முறை, நீர்ப்பாசனத்தின் நுணுக்கங்கள், நில சாகுபடி, போரில் வென்ற வரலாறு, அவர்களது விளையாட்டுகள் ஆகியவை 12 வயது சிறுவர்களை வெகுவாகக் கவரும். இடமிருந்தால் உள்ளூர் வரலாற்றையும் சேர்க்கலாம்.
அந்தந்த மாநிலங்களின் இலக்கியத்தை பாடத்தில் இடம்பெறச் செய்யலாம். மதம் தொடர்பான பாடங்களை விட, அந்தந்த மொழிகளில் உள்ள நாடகங்கள், வேடிக்கைக் கதைகள், சொல் புதிர்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்யலாம். கசக்கிப் பிழிந்து வழங்கப்படும் கல்வி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானதாக இல்லை என்பதையே, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உணர்த்துகின்றன. வட இந்திய பாடத் திட்டம் மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க உதவாது. ஏனென்றால், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக வரலாற்றைக் கற்பிப்பது அவசியம்.
இன்றைக்கு இருக்கும் இணைய வசதியின் மூலம், 2 அல்லது 3 பாடங்களைக் கூட படிக்க முடியும் என்றால், டெல்லிக்கு வெளியே உள்ள வரலாற்றையும் நாம் நிச்சயம் இடம் பெறச் செய்யலாம். குழந்தைகள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் உணர்வை அதிகரிக்க வரலாறு உதவ வேண்டும்.
பொதுவாக தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் தென்னகத்தைச் சார்ந்த வரலாறுகள் புறக்கணிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்களை எல்லாம் நீக்கிவிட்டு, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருப்போரை வைத்து பாடத்திட்டத்தை தயாரிக்கின்றனர். இதன்மூலம் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக திணிக்கும் போக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் விஷமத்தனமாக பாடத்திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டு வருகிறது. இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் முயற்சி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
எனவே, வரலாறு குறித்த பாடத்திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும். அதற்கேற்றார்போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.