இந்தியாவில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் நேரடியாக ஆன்லைன் விற்பனையை தொடங்க உள்ளது. இதற்காக வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் ஆப்பிளின் நேரடி ஆன்லைன் விற்பனை இணையதளத்தை ஆப்பிள் தொடங்குகிறது.
இந்த இணைதளத்தில் ஆப்பிளின் அத்தனை பொருட்களும் கிடைக்கும். மேலும் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் கஸ்டமர் கேர் சேவையை நேரடியாக வழங்க இருக்கிறது. ஆப்பிளின் பொருட்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் கிடைத்தாலும், இனி நேரடியாகவும் வாடிக்கையாளர்கள் இந்த இணையதளத்தின் மூலம் வாங்கலாம்.
இந்த இணையத்தின் மூலம் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்தின் குறைதீர்ப்பு மைய அதிகாரி ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஆப்பிள் பொருட்கள் சம்பந்தமான குறைகளை கேட்டறிந்து வாடிக்கையாளர்களுக்கு உதவுவார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், “எங்களின் வாடிக்கையாளர்கள் அவர்கள் நேசிப்பவர்களுடனும், அவர்களை சுற்றியுள்ள உலகத்துடனும் தொடர்பில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த ஆப்பிள் இணையதளத்தில் வாங்கப்படும் மேக் கம்ப்யூட்டர்களை வாடிக்கையாளர்களை கான்ஃபிகர் செய்துகொள்ளும் வசதியும் இருக்கும். மேலும் மாணவர்களுக்கு ஆப்பிள் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த இணையதளத்தில் வாங்கப்படும் பொருட்கள் புளூ டார்ட் கொரியர் சர்வீஸ் மூலம் டெலிவரி செய்யப்படும்.