டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து வந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, மதவெறியர்களின் தூண்டுதலால் கலவரம் உருவானது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மத்திய பா.ஜ.க அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, இந்தக் கலவரத்திற்கு ஆதரவளித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கியதோடு, அவர்கள் மீதே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கடுமையாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி கலவரத்தில் போலிஸாரின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அந்தக் கலவரம் தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, தி.மு.க சார்பில் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் சார்பில் அகமது படேல் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “டெல்லி கலவரத்துக்கு பின்னால் இருக்கும் சதித் திட்டம் குறித்து விசாரிக்க வேண்டும். இந்தக் கலவரத்தில் போலிஸாரின் பங்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் துன்புறுத்தியது, பொய்யான வழக்குகளைப் பதிவு செய்தது போன்றவை சந்தேகங்களை எழுப்புகின்றன.
டெல்லி போலிஸாரும் வன்முறையில் ஈடுபட்டு, கற்களை வீசுமாறு கும்பல்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களைத் தூண்டிவிடுவதும் வீடியோ காட்சிகள் மூலம் தெரியவருகிறது. கலவரத்தின்போது வெளியான ஒரு வீடியோவில், சீருடை அணிந்த போலிஸ் ஒருவர், இளைஞர் ஒருவரைச் சாலையில் தாக்கிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கலவரத்தில் பல்வேறு மூத்த போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டது குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், எந்த போலிஸார் மீதும் நடவடிக்கையோ, விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை.
சட்டம் ஒழுங்கு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், நம்பகத்தன்மையான, நடுநிலையான விசாரணை தேவை. டெல்லி கலவரம் தொடர்பாக பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “முறையான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பபட வேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். டெல்லி கலவர விவகாரத்தில் CAAக்கு எதிராகப் போராடிய அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் பா.ஜ.க அரசால் குறிவைக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.