நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் காலத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி வரிவசூல் குறைவாக இருக்கும் இந்த நிலையில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை தரமுடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகப் பதில் கூறியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூலில் ஏப்ரல் – ஜூலை மாதம் வரை வசூலித்த பணம் ரூ. 1,8,000 கோடியாக இருந்தது, ஆனால் இலக்கு ரூபாய் 6,90,500 கோடியாகும்.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்நிலையில் “மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை.” என எழுத்து பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த நிதி ஆண்டில் ரூ. 30,528 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.19,797 கோடியாகக் குறைந்துள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையாக மத்திய அரசு ரூ.11,700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.