உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அரசின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய பாஜக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு கணக்கை காட்டுகிறது.
மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததோடு நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பரிபோனதே மிச்சம் என தொடர்ந்து ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.
அவ்வகையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் பொருத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும், பாதுகாப்பான எதிர்காலம் கிடைக்கும் என இளைஞர்கள் நம்பிக்கையின்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே நிலைகுலைந்து கிடந்த இந்திய பொருளாதாரத்தை மோடி அரசின் ஊரடங்கு அறிவிப்பு மேலும் மோசமடையச் செய்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.