பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா காலத்திலும் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்தேறி வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாநில காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, மாநிலத்தில் நடந்தேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போன பன்னாதேவி நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று நூதன முறையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
அதில், நேற்று (செப்.,11) பிற்பகல் நேரத்தில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 3 இளைஞர்கள் முகக்கவசம் அணிந்தபடி வந்தனர். வந்தவர்கள் கிருமிநாசினி கொண்டு தங்கள் கைகளை தூய்மைப்படுத்திக்கொண்ட மறு நொடியே தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை காட்டி வந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
மூவரில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியவாறு பணத்தை அள்ளிக் கொடுக்க எஞ்சியுள்ள இருவரும் அதனை பையில் அடைத்துச் சென்றிருக்கிறார்கள். சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் புகார் தெரிவித்ததன் பேரில் அலிகார் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி கொள்ளையர்கள் மூவரில் இருவர் குறித்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலிகார் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.