கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. ஊரடங்கால் மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 31ம் தேதி தரவுகளின்படி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017- 2018-ம் ஆண்டில் மட்டும் 6.1 சதவீதம் வேலையின்மை அதிகரித்துள்ளது.
ஆண்களில் 6.2 சதவீதமும், பெண்களில் 5.7 சதவீதமானோரும் வேலையின்றி தவித்து வருவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வேலையின்மை ஒருபக்கம் அதிகரிக்கும் அதேவேளையில், பசியும், வேலையில்லாத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 2019ம் ஆண்டில் மட்டும் வேலையின்மை பிரச்னையால் 2,851 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த தற்கொலை விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அதில், தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இதே தற்கொலை எண்ணிக்கை 2018ல் 2,741 ஆக இருந்ததும் அறிக்கையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
அதுமட்டுமல்லாது வேலையின்மையால் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளினால் தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், சமீபத்திய கொரோனா தற்கொலைகளால் முதலிடத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லூர்கள் தெரிவித்து வருகின்றனர்.