நாட்டில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தி வந்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சாமானிய கூலித் தொழிலாளர்களுக்கு போதிய நிவாரண நிதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இதனை முன்னிறுத்தி பொருளாதார அறிஞர்கள் பலருடன் தான் ஆற்றிய ஆலோசனைகள் மற்றும் உரைகளையும் ராகுல் காந்தி வெளியிட்டு வந்தார். அவை எவற்றையுமே கருத்தில் கூட கொள்ளாமல் மத்திய மோடி அரசோ மதவாத அரசியலை முன்னிறுத்தியே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி முன்பு கூறியதையே தற்போது ரிசர்வ் வங்கியும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, மக்களுக்காக அரசு அதிகளவில் செலவுகளை செய்யவேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, இந்தியாவின் பொருளாதார பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு நான் எச்சரித்திருந்ததையே ரிசர்வ் வங்கியும் தற்போது கூறியுள்ளது.
ஆகவே ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அதிகளவிலான தொகையை செலவழிக்க வேண்டும், கடன்களை வழங்க வேண்டாம் என்பதேயே அரசாங்கம் தற்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகும்.
ஏழை மக்களின் கைகளில் பணம் புழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்துறையினருக்கான வரியை குறைப்பது தேவையற்றது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய பயன்படும்
மேலும், ஊடகங்கள் மூலம் பிரச்னைகளை திசைத்திருப்பும் முயற்சியால் ஏழைகளுக்கு எவ்வித பலனும் ஏற்பட்டிடாது. பொருளாதார பேரழிவுகளை மத்திய மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.