உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் கூறிய கருத்து குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பான விசாரணையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற உத்தரவே தவறானது, மன்னிப்பு என்பது மனதிலிருந்து தானாக வரவேண்டும் என்று பிரசாந்த் பூஷன் தரப்பு வாதிட்டது.
மேலும், இந்த நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெறும் பல நிகழ்வுகளால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். நீதிமன்றம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்று கூறிய அவர், பிரசாந்த் பூஷன் தனது நிலைப்பாட்டிலிருந்து மாற விரும்பவில்லை என்றும் அவர் மீதான வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்றும் ராஜிவ் தவான் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அருண்மிஸ்ரா, “மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? மன்னிப்பு என்பது ஒரு மந்திரச்சொல், இது பல விஷயங்களை குணப்படுத்தும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், நீதிபதி அருண் மிஸ்ரா மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்களிடம் கரடுமுரடாகவே நடந்துக்கொள்கிறார் எனக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுள்ளது.
அதன் விவரம்:-
"உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா எப்போதும் வழக்கறிஞர்களிடம் கரடுமுரடாக நடந்துகொள்வதோடு, இளம் வழக்கறிஞர்களிடம் மட்டுமல்லாமல் மூத்த வழக்கறிஞர்களிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
அரசாங்கம் அக்கறை காட்டுகிற முக்கிய வழக்குகள் அனைத்தும் அவருக்கே ஒதுக்கப்பட்டன.
தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்தபோது, முக்கிய வழக்குகள் அனைத்தும் அருண் மிஸ்ராவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதாகச் சொல்லியே நீதிபதிகள் செல்லமேஷ்வர், குரியன் ஜோசப், மதன் லோகுர் மற்றும் ரஞ்சன் கொகாய் ஆகிய நால்வரும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய், நீதிபதி லோயா மரண வழக்கை சீனியாரிட்டியை மீறி அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கீடு செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் பாலியல் புகாரில் சிக்கியபோதும் அரசாங்கம் அக்கறை காட்டுகிற முக்கிய வழக்குகள் அனைத்தையும் அருண் மிஸ்ராவுக்கே ஒதுக்கீடு செய்தார். தலைமை நீதிபதியாக பாப்டே வந்தபிறகு அவரும் முக்கிய வழக்குகள் அனைத்தையும் அருண் மிஸ்ராவுக்கே ஒதுக்கீடு செய்தார்.
நீதிபதி அருண் மிஸ்ரா மற்ற நீதிபதிகளை விட அதீத அதிகாரத்துடன் செயல்படுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, மற்ற நீதிபதிகளை தரக்குறைவாகவே நடத்தி வந்தது, வழக்கறிஞர்களை இவ்வளவு காலமும் வேதனைக்கு உள்ளாக்கியிருந்தது. மொத்த உச்சநீதிமன்றத்தையும் தானே கட்டுப்படுத்துவது போன்று நடந்துகொண்டு, உச்சநீதிமன்ற அமைப்புக்கு அவர் பெரும் பாதிப்புகளை உருவாக்கி விட்டார்.
எனவே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், அடுத்த வாரம் ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு எவ்வித பிரிவு உபசார விழாவும் நடத்தப்போவதில்லை என அறிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு பிரியாவிடை விழா நடத்தப்போவதில்லை என வெளியாகியிருக்கும் தகவலில் உண்மையில்லை என Live Law தரப்பில் இருந்து நிர்வாகக் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.