பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி குழுமத்திற்கு அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு வருவதற்கு அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என பலரும் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசின் அமைச்சரவை. கொரோனா தடுப்பு பணிக்களை மேற்கொள்ளாமல், இதுபோல நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மோடி அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசின் உரிமையையும், தன்னாட்சியையும் பறிப்பதாகும்.
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு அளித்த உறுதிமொழியை இது மீறுகிறது. எனவே இம்முடிவைத் ரத்து செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேப்போல் முன்னதாக மத்திய அரசின் முடிவை முடிவை எதிர்த்தும், மறுபரிசீலனை செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2003ம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறி திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடுவது முறையற்றது.
மாநில அரசின் வாதங்களை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானது. இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்காது. திருவனந்தபுர விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இந்த முடிவு மாநில மக்களின் விருப்பதிற்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.