நாட்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்ததில் இருந்தே சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்து நடந்தேறி வருகிறது. அரசு பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை இயற்றி பெரும் சச்சரவை ஏற்படுத்தி வருகிறது.
அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றினை கொண்டு வந்து குலக் கல்வியையும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தையும் புகுத்த அரும்பாடுபட்டு வருகிறது மத்திய பாஜக அரசு.
இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் எதனையும் பொருட்படுத்தாமல் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவின் புதிய கல்விக் கொள்கை பரிந்துரையின் படி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனையடுத்து இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என மாற்றப்பட்டிருக்கிறது.
தற்கிடையே செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை கூட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை சட்டமாக கொண்டு வருவதற்காக மத்திய மோடி அரசு தீவிரமாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.