தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணான பூர்ணசுந்தரி யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளது இந்திய அளவில் உற்சாகமூட்டும் நம்பிக்கைக் கதையாக மாறியுள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான முடிவு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பலரும் இந்த யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மதுரையைச் சேர்ந்த பூர்ணசுந்தரியின் கதை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
25 வயதாகும் பூர்ணசுந்தரிக்கு கண் பார்வை தெரியாது. அவர் கடந்த 5 வருடங்களாக யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி வருகிறார். கண் பார்வையற்ற அவருக்கு அவருடைய பெற்றோர் இரவு பகலாக உட்கார்ந்து பாடங்களை அருகில் உட்கார்ந்து படித்துக்காட்டியுள்ளனர்.
அவருடைய நண்பர்கள் யு.பி.எஸ்.சி பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை வெளியில் சென்று வாங்கி அதை ஆடியோ வடிவில் மாற்றிக்கொடுத்து உதவியுள்ளனர். இவற்றை வைத்து படித்த பூர்ணசுந்தரி தற்போது இந்திய அளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர் “என்னுடைய பெற்றோர் எனக்கு பெரிதும் ஊக்கம் அளித்தனர். என்னுடைய வெற்றியை நான் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். இது என்னுடைய நான்காவது முயற்சி, நான் இந்த தேர்வுக்காக 5 வருடங்களை செலவழித்திருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
பூர்ணசுந்தரியின் இந்த வெற்றிக் கதையை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெர் வீரர் முகமது கைஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யு.பி.எஸ்.சி ஆடியோ புத்தகங்கள் கிடைப்பது மிகவும் கடினம் என்றும் பூர்ணசுந்தரியின் பெற்றோர்கள், நண்பர்கள் உதவியால் அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகியுள்ளார் என்றும் கைஃப் தெரிவித்துள்ளார். மேலும் நம் கனவுகளை நாம் எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.