இந்தியா முழுவதும் கோவிட் 19 தொற்று நோய், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கால் தினக்கூலி வேலை செய்பவர்கள் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் குடும்பங்கள் நோயின் தாக்கத்தாலும் பசியினாலும் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இச்சூழலால் யாரும் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்பதை உறுதிபடுத்த, அரசாங்கத்தோடும் உள்ளாட்சி அமைப்புகளோடும் இணைந்து ActionAid என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை மையமாக வைத்துள்ளது.
இந்த நிலையில், ஊரடங்குக்கு முன்பும் பின்பும் வாழ்க்கை முறை என்ற வகையில் நாடு முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 537 அமைப்புசாரா தொழிலாளர்களிடம் ActionAid அமைப்பு ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது.
வீட்டு வசதி, உணவு, நீர், சுகாதாரத் தேவை, கடன், தொழிலாளர்களின் நல்வாழ்வு, உடல்நலம், நீண்டகால தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆவணப்படுத்தியுள்ளது.
தற்போது அதுதொடர்பான அறிக்கையினையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கினர் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
இதனால் தங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 17 சதவிகிதம் பேருக்கு பகுதி நேர ஊதியம் மட்டுமே கிடைப்பதாகவும், 53 சதவிகிதத்தினருக்கு ஊரடங்கின் போது கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மொத்தமாக 75 சதவிகித மக்கள் ஊரடங்கு காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கு சமயத்தில் நான்கில் ஒரு பகுதியினர் தங்களுக்கான அவசர சுகாதாரத் தேவைக்குக் கூட அணுக முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளனர். Actionaid அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் பதிலளித்த 60 சதவிகிதம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு இன்னலுக்கு ஆளாகியுள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சியாக அமையும் என அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் சந்தீப் சக்ரா தெரிவித்துள்ளார்.