இந்தியாவில், இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை எப்போது உருவானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி எம்.பி, “இன்று சென்னை விமானநிலையத்தில் தன்னிடம் இந்தியில் பேசிய மத்திய பாதுகாப்புப் படை பெண் அதிகாரியிடம் தனக்கு இந்தி தெரியாதென்பதால் தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசுமாறு கேட்டதற்கு நீங்கள் ஒரு இந்தியரா எனக் கேள்வி எழுப்பியதாக டிவிட்டரில் தெரிவித்தார்.
இது மிகப் பெரிய அளவில்விவாதமாக மாறியது. இது குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் செய்துள்ள ப.சிதம்பரம் “சென்னை விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி கனிமொழிக்கு நேர்ந்த வெறுக்கத் தக்க இந்த சம்பவம் எப்போதாவது நடப்பது அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “தொலைப்பேசி உரையாடலிலோ, முகத்துக்கு நேராகப் பேசும்போதோ என்னை இந்தியில் பேசச் சொல்லி அரசு அலுவலர்கள் மற்றும் சாதாரண குடிமகன்கள் இதே போல் பரிகாசம் செய்துள்ளனர்.
மத்திய அரசு உண்மையிலேயே இந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழி என்று எண்ணினால் அரசுப் பணியாளர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயில வலியுறுத்தவேண்டும்” எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.