விஜயவாடா பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அங்கு 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை அளவில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5 மாடி கொண்ட ஓட்டல் கட்டடத்தின் ஒரு பகுதியில் பற்றி தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
இதனால் விஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள விஜயவாடா போலிஸார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது.
இப்படி இருக்கையில் அடுத்தடுத்து பல்வேறு கோர சம்பவங்கள் நடந்தேறி வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.