பா.ஜ.க அரசு நாடு முழுவதும் இந்தி மொழியைத் திணிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது மோடி அரசு.
மேலும், இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி எம்.பி, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார்.
இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதையடுத்து, கனிமொழி எம்.பி-யிடம் அதிகாரி பேசியது பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சி.ஐ.எஸ்.எஃப்பின் கொள்கை அல்ல என்றும் சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையை வரவேற்றுள்ள கனிமொழி எம்.பி., “இந்தி தெரிந்தால்தான் இந்தியர்கள் என்ற மனநிலை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.