நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி, உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி வழக்கு தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டும் பணியை அம்மாநில அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.
இந்நிலையில் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர்ஆதித்யநாத் மற்றும் பல்வேறு மடங்களைச் சேர்ந்த துறவிகள், சாமியார்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கு அழைப்பு விடுத்த ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம், குடியரசுத் தலைவர், தலித் துறவிகள் என தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அழைப்புவிடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துறவிகளை சாதி அடையாளங்களோடு பார்ப்பதால், தன் போன்றவர்களுக்கு அழைப்பில்லை என்று பிரயாக்ராஜில் உள்ள தலித் வகுப்பைச் சேர்ந்த துறவி மண்டலேஷ்வர் கண்ணையா பிரபுநந்தன் கிரி வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தலித் வகுப்பைச் சேர்ந்த மகா மண்டலேஷ்வர் சுவாமி கண்ணையா பிரபுநந்தனும் 200 பேர்களில் ஒருவராக அழைக்கப்பட வேண்டும். சாதியப் பாகுபாடுகளால் தலித்துக்கள் பாதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மஜ்லிஸ்கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பிரதமர் மோடியை அழைத்தவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?
தலித் என்பதால் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற சந்தேகத்தை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். இன்னும் பலரும் ராமர் கோயில் நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.