நாட்டில் கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார ரீதியில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் வேலையின்றி தவித்து வரும் மக்கள், வேறு வழியின்றி வெளியே கொரோனாவுடனும் போராடிக்கொண்டே தங்களது வாழ்வாதாரத்தை மீட்க அயராது பாடுபட்டு வருகின்றனர்.
இதன் கூடவே, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையும் உச்சானிக் கொம்பில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துக் கொண்டே வருகிறது. கையில் பணமும் இல்லாமல் வேலையில் இல்லாமல் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
ஒரு புறம் எதிர்க்கட்சிகளோ மக்களிடையே பணப்புழக்கத்தை உருவாக்குமாறு தொடர்ந்து மத்திய பாஜக அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இவற்றுக்கு எதற்கும் தீர்வு காணாத மோடி அரசு கொச்சி விமான நிலையத்தில் விற்கப்படும் டீ, காபி, வடைகளின் விலையை குறைத்துள்ள செய்தி மக்களை பெரும் வேதனையிலும் அதிருப்தியிலும் ஈடுபடுத்தியுள்ளது.
கேரளாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கடந்த மாதம் டெல்லியில் இருந்து வந்த பயணி ஒருவர் அங்கு விற்கப்படும் திண்பண்டங்களின் விலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பிரதமர் மோடிக்கே கடிதம் மூலம் தனது புகாரை தெரிவித்திருக்கிறார்.
இந்த புகார் மீது சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எம்.ஆர்.பி விலைக்கு ஏற்ப திண்பண்டங்கள் விற்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அந்த பயணி இதேப்போன்று மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.