பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் வட மாநிலங்களில் அடிக்கடி அப்பாவி மக்களைத் தாக்கும் சம்பவங்கள், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவா குண்டர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இந்த அடக்குமுறை கலாச்சாரம் வட மாநிலங்களிலிருந்து தற்போது தமிழகத்திலும் இந்து மக்கள் கட்சியினரால் தலைதூக்கத் தொடங்கிவிட்டன.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. பக்ரீத் பண்டிகையையொட்டி என்பதால் இதுபோன்ற சம்பவங்களில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பிலிருந்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
முதல் புகார் : 50 வயதான ஒருவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு ஏழு மாடுகளை ஒரு வண்டியில் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் வாகனத்தைத் தடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து காஞ்சிபுரம் போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரை மீட்டனர்.போலிஸார் விசாரித்ததில் அவர்கள் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. “அந்த நபர் மாடுகளை ஒரு இறைச்சி கூடத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் நினைத்துவிட்டார்கள்” என்று ஒரு காவலர் கூறினார்.
இரண்டாவது புகார் : சென்னைக்கு அருகில் 55 வயதுடைய ஒருவர் தனது பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் அவரை வழிமறித்து எங்கிருந்து வருகிறார் என்று விசாரித்த பிறகு இந்து மக்கள் கட்சி கும்பலிலிருந்த சிலர் அவரை தாக்கவும் வந்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவர்களை எச்சரித்துவிட்டு மட்டும் அனுப்பிவிட்டனர்.
இதையடுத்து மூத்த போலிஸ் அதிகாரிகள், இது பக்ரீத் பண்டிகை காலம் என்பதால் இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறையினரை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும், குற்றவாளிகள் எச்சரிக்கையுடன் மட்டுமே அனுப்பப்பட்டனர். எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.