கொரோனா பெரும் தொற்று காரணமாக நாட்டில் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்திப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பாரத் ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதாரம் குறித்த மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “போரில்லா காலத்தில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்திக்கின்றன. இதனால் உற்பத்தி, வேலைவாய்ப்புத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் நமது நமது நிதி அமைப்பைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கிறது. இதனால் ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.